டெல்லி:  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷா மீது புகார் கூறிய, இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா, இன்று தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட லவாசா, அதன் பொறுப்பு ஏற்கும் வகையில்,  தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா, தனது ராஜினாமா கடிதத்தை  குடியரசு தலைவருக்கு   அதில், ஆகஸ்ட் 31ம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. ஆனால், விதிகளை மீறி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்பட பலர், புல்வாமா, பாலகோட் தாக்குதல்கள் குறித்து பேசி வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்கள் அளித்தன. ஆனால், அந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தியதில், மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு லவாசா கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவி காலம்,  இன்னும் இரு வருடங்கள் உள்ள நிலையில், அவர் தலைமை தேர்தல் ஆணையாளராக வரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.