மும்பை

மகாராஷ்டிர மாநில பாஜக நீர்வளத்துறை அமைச்சர் பபன்ராவ் லோனிகர் வாக்காளர்களுக்குப் பணம் அளித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும்,  பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரசும் போட்டியிட்டு வருகின்றன.

பாஜகவின் மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சர் லோனிகர் இந்த தேர்தலில் ஜல்னா மாவட்டத்தில் அமைந்துள்ள பார்ட்டூர் தொகுதியில் களம் இறங்குகிறார்.   அவர் சமீபத்தில் தாம் வெற்றி பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அதற்காக மக்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து விட்டதாகவும் கூறியதாகத் தகவல்கள் வெளி வந்தது.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ரத்னாகர் மகாஜன் செய்தியாளர்களிடம் அமைச்சர் இவ்வாறு கூறியதற்கான வீடியோ தம்மிடம் உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவரை தேர்தல் ஆணையம் தகுதியிழப்பு செய்ய வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

இதை பாஜக அமைச்சர் மறுத்துள்ளார்.  இந்த வீடியோ உண்மை இல்லை எனவும் இந்த வீடியோவின் உண்மைத் தன்மையைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அமைச்சரின் பேச்சு குறித்த இந்தப் புகார் பாஜகவினருக்கு மிகவும் சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது.