கிருஷ்ணாசாமியின் சாதிச் சான்றிதழை ரத்து செய்யும்படி புகார்

கோயம்புத்தூர்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர்  கிருஷ்ணசாமியின் சாதிச்சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மள்ளர் பாரதரம் சங்கத்தின் செயலாளர்   சிவ ஜெயப்பிரகாஷ் என்பவர் இப்புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

அதில், “டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு கடந்த 09-1-1998 அன்று  நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899, SL.NO. .10 / 98  “தேவேந்திரகுலத்தான்” என்று கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் வழங்கியுள்ளது.   இது, கிருஷ்ணசாமி, தனது  செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி  பெற்ற போலியான சான்றிதழாகும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்  கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை  பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி, சங்கீதா மருத்துவமனை, பாலக்காடு மெயின்ரோடு, குனியமுத்தூர் என உள்ளது. இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊரில்உள்ள , உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் . கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்டப்பிடாரம்  SC  தொகுதியில்  MLA  ஆகி உள்ளார். இதன் மூலம் உண்மையான  தேவேந்திரகுலமக்கள்  இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

கிருஷ்ணசாமி உண்மையில் அருந்ததியர் (மாதாரி, சக்கிலியர்)  சாதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி கேரளா OBC சாதியைச் சேர்ந்தவர். இவ்விருவரும் தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  எனவே அவரது சாதிச்சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.