டில்லி

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பீகார் மாநிலத்திலும் அரியானா மாநிலத்திலும்  இடம் மாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன.  இந்த சில மணி நேரங்களில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடக்கக் கூடும் என எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.  இவ்வாறு முறைகேடுகள் நடத்தவே வாக்குப்பதிவுகள் நீண்ட நாட்கள் நடந்துள்ளதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சந்தவுலி பகுதியில் ஒரு பெண்மணி தமக்கு ரூ.500 அளித்து விட்டு தமது கையில் மை வைக்கப்பட்டதாகவும் தாம் வாக்களிக்கவில்லை எனவும் கூறி உள்ளார்.  அதை ஒட்டி சந்தவுலி பகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

அத்துடன் பீகார் மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுவதாக புகார்கள் வந்தன.   ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவ்வாறு இயந்திரங்கள் ஏற்றிச் சென்ற ஒரு வாகனத்தை பிடித்ததாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதைப்போல் அரியானா மாநிலத்தில் புரியகேராவில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப் பட இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் டிவிட்டரில் செய்திகள் பதியப்பட்டுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், “எக்சிட் போல் முடிவுகள் என்னும் போலி செய்தியை பரப்பி ஆளும் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.   நீங்கள் அந்த போலி செய்திகளை நம்ப வேண்டாம்.

வாக்கு பதிவு இயந்திரத்தை யாரும் மாற்ற முடியாதபடி கவனமுடன் இருக்க வேண்டும்.  வாக்கு எண்ணிக்கையின் போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.  நமது கடின உழைப்பு நமக்கு வெற்றியை தரும்” என குறிப்பிட்டுள்ளார்.