சென்னை: மாநில தலைநகரில் மற்றொரு முழு ஊரடங்கை அமல்படுத்துவதானது, மாநில அரசால் அமைக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களுடைய குழுவின் பரிந்துரையில் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளர் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

இதுவரையான சூழலில் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவிதமான ஊரடங்குகளும், அக்குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமல்படுத்தப்பட்டவை என்றும், அவற்றில் தளர்வோ அல்லது மேலும் கட்டுப்பாடுகளோ, அக்குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சூழலைப் பொறுத்தே அனைத்து முடிவுகளும் மேற்கொள்ளப்படும். நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேசமயம், தமிழகத்தில் சமூகப் பரவல் நிலை இல்லை.

சென்னையில் குடிசைப் பகுதிகளில் அதிக நபர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அப்பகுதிகளிலிருந்து பிற இடங்களுக்கு தொற்று பரவாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் நிபுணர் குழுவின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றாலும், தற்போதைய நிலையில் மக்களின் கைகளில்தான் அனைத்தும் உள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றுள்ளார் அமைச்சர். சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.