பெங்களூரு: கர்நாடக தலைநகரில், ஜூலை 14 முதல் 22ம் தேதிவரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை அங்கு அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“ஜூலை மாதம் 14ம் தேதி இரவு 8 மணியிலிருந்து, ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்” என்று முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர்ப்புற மற்றும் ஊரக மாவட்டங்களில் இந்த ஊரடங்கு அமலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் திட்டமிடப்பட்ட தேர்வுகள் போன்றவற்றுக்கு தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் போன்றவை திறந்திருக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ & முதுநிலைத் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாகவும் அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா தெரிவித்தார்.