கான்பெரா: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில், பிரிட்டனில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நகரில், மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நகரிலுள்ள ஒரு தனிமைப்படுத்திக் கொள்ளும் ஹோட்டலில் பணிபுரிந்த கிளீனருக்கு, இந்த புதியவகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்நகரில், மொத்தம் 3 நாட்களுக்கு மக்கள் வெளியே வர இயலாத வகையிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், பழைய வகை கொரோனா வைரஸைவிட, இந்தப் புதியவகை வைரஸ், மிக அதிகளவில், வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“பிரிட்டனிலிருந்து பரவும் இந்தப் புதியவகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், உடனடியாக செயலாற்றுவது அவசியம்” என்றுள்ளார் குயின்ஸ்லாந்து மாகாணப் பிரதமர் அனஸ்டாசியா பலாசூக்.

பிரிஸ்பேன் ஊரடங்கு விதிமுறையின்படி, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.