தேனி:
தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தலைமைச் செயலளர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரியகுளம், போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகளில் தீவிர கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சில தளர்வுகள் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட நகராட்சிப் பகுதிகளில், அத்தியாவசிய சேவைகளான காய்கறிக் கடைகள், பழங்கள், பால், குடிநீர், சமையல் எரிவாயு, மளிகை சாமான்கள், பெட்ரோல் பங்குகள், நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருள்கள் விற்பனை, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி, தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் இன்றுமாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.