ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் வாக்காளர்கள் மதம், இனம் மற்றும் கோட்பாடு சார்ந்து பிரிந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சிக்கல் வாய்ந்ததாக உள்ளன.

கடந்த ஏப்ரல் மாத தேர்தலில் தெளிவான முடிவுகள் கிடைக்காத சூழலில், தற்போது மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தேர்தலிலும் தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடைக்காத சூழலே நிலவுகிறது. இந்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி அரசு அமைப்பதென்பது ஒரு சிக்கலான செயல்பாடாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாத தேர்தல் முடிவில், தற்போதைய பிரதமர் பென்ஜமின் நேதன்யகு, யூத மத அடிப்படைவாத கட்சி மற்றும் தேசியவாதிகளின் கூட்டணிகளுடன் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியமைத்தார். ஆனால், கடினப் போக்குடைய இஸ்ரேல் பெய்டனு கட்சி அவருடன் மாறுபட்டதால், அவருக்கான பெரும்பான்மை பலம் 60 என்பதாக குறைந்துவிட்டது.

120 பேர் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நேதன்யகுவுக்கு தற்போது 60 பேர் ஆதரவளிக்கிறார்கள். பெரும்பான்மைக்கு வெறும் 1 நபர்தான் குறைவு என்றபோதிலும், மாற்று ஏற்பாட்டை செய்யாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை அறிவித்துள்ளார் பிரதமர் நேதன்யகு.