குடியாத்தம்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி  குடியாத்தம் வாக்குச்சாவடியில்  வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கணினிகள் கொள்ளைய்டிக்கபட்டுள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேர்தல்  நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தொகுதிக்கான தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் ஏ சி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டி இடுகின்றனர். நேற்றுடன் இந்த தொகுதியில் பிரசாரம் முடிவடைந்தது.

இந்த தேர்தலுக்காக குடியாத்தம் காந்தி நகரில் உள்ள அரசு திருமகள் கல்லூரி  வளாகத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 11 கணினிகளைக் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு நடந்து வருகிறது. நேற்று இரவு இந்த பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் 11 கணினிகள், பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்கள், மற்றும் தேர்தலை முன்னிட்டு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா  உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

தேர்தல் பணிக்காக இன்று காலை பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள் இந்த  பள்ளியின் அறைக்கதவுகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ந்துள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுக்கா காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளை கும்பலைத் தேடி வருகின்றனர்.