நெட்டிசன்

சீனுவாசராவ், அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா.

மிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த, ஆகச் சிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்த தோழர் தா.பாண்டியன் மறைந்தது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

நான் பள்ளிப்படிப்பை முடித்ததும் எனது தந்தையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி தலைவர்களில் ஒருவருமான தோழர் தங்கவேல் என்னை 1977 ஆம் ஆண்டு கொடுமுடியில் நடந்த ஒரு மாதகால இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாணவ மன்றத்திற்கும் இளைஞர் பெருமன்றத்திற்கும் நடத்தப்பட்ட அரசியல் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.  அந்த வகுப்பில் தோழர் ராஜா மற்றும் தோழர் மகேந்திரனும் கலந்துகொண்டனர்.

அந்த கொடுமுடி வகுப்பில் எங்களுக்கு அரசியல் வகுப்பெடுத்த தோழர் தா.பாண்டியன் மற்றும் தோழர் நல்லக்கண்ணு அவர்களை சந்தித்த அனுபவம் எனக்கு பெரும் அனுபவமாக அமைந்தது. வகுப்பின் கடைசியில் அவரவர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றி பேசும் வாய்ப்பில் நான், இந்தியாவில் புரட்சியால் மட்டுமே மக்கள் உரிமையை வென்றெடுக்க முடியும் என பேசியபோது, தோழர் தா.பாண்டியன் என்னை இடைமறித்து தோழர் சீனுவாசராவ், இந்த அரசியல் வகுப்பை தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர். அரசியல் ரீதியாகவும் மக்கள் உரிமையை வென்றெடுக்க இயலும் என கூறினார்.

புதுச்சேரியின் தோழர் சுப்பையாவிடம் என்னைப்பற்றி பாராட்டி பெருமையாக பேசியதாக கூறி தோழர் சுப்பையா என்னை பாராட்டியது இன்றும் நினைப்பதிலே மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்றிலிருந்து என்மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த பாசத்தை காட்டியவர் தோழர் தா.பாண்டியன்.

பின்னாளில் உலகம் தழுவிய மிதிவண்டி பயணத்தை அணுஆயுத ஒழிப்பிற்காக ஆரம்பித்தபோது பெருமையோடு பாராட்டி வழியனுப்பி வைத்தது மட்டுமல்லாமல், எங்களது எட்டு உலக பயணங்களிலும் அவரது பாராட்டுகள் இருந்தன.

2009 ஆம் ஆண்டு எங்களது 7ஆம் உலகப் பயணத்தை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களோடு சேர்ந்து வாழ்த்தி ஆரம்பித்து வைத்தார். அதே ஆண்டு ஈழத்தில் முள்ளிவாய்க்கால் போர் ஆரம்பித்த போது எங்களது உலகப் பயணத்தை தள்ளிவைத்துவிட்டு, இந்தி

ய கம்யூனிஸ்டு கட்சியோடு இணைந்து இந்திய மத்திய அரசை கண்டித்து பலநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு தோழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம். அப்போது முழுவதுமாக தா.பாண்டியன் அவர்களோடு இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்தது மறக்க இயலாது. பெருத்த ஆளுமையாக இருந்தபோதும் தோழர்களிடம் பழகும் போது அவர்களிடம் மிகுந்த தன்மையுடன் பழகும் பண்பு கொண்டவர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எனக்கு பெருத்த பாதிப்படைய வைத்துவிட்டதையும், இனிமேல் தமிழகத்தில் அரசியல் ஈடுபாட்டை தவிர்த்துக்கொள்ள முடிவெடுத்ததை அறிந்த தோழர் தா.பாண்டியன் என்னை தனியாக அழைத்து தேற்றிய போது, அவரிடம் இருந்த தோழமைப் பண்பு இன்றளவும் மறக்க இயலாது.

கம்போடியாவில் தொழில்சார்ந்து குடியேறிவிட்டாலும் எனது எண்ணம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் சார்ந்தே இருக்கும். அப்படியாக தோழர் தா.பா விடம் பலமுறை தொலைபேசி வாயிலாக பேசி மகிழ்ந்த தருணங்களை இன்று நினைக்கின்ற போது பெருத்த மகிழ்ச்சியை கொடுக்கின்ற போதும் தோழர் தா.பாண்டியன் இன்று நம்மிடையில்லையே என்று நினைக்கின்ற போது மனம் கலங்குகிறது .

தோழர் தா.பா, உங்களை என்றென்றும் மறவேன். உங்களது கனவை நிறைவேற்ற இளைய தலைமுறையினரோடு இணைந்து பாடுபடுவேன் என உறுதியேற்கிறேன்.

சீனுவாசராவ், உலகம் சுற்றிய வீரன்
அங்கோர் தமிழ்ச் சங்கம்
கம்போடியா.