‘கதிர் அரிவாளை’ தேடிய காம்ரேட்டுகள் : சுத்தியல் இருந்ததால் அதிர்ச்சி..

 

ஐதராபாத் :

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநராட்சிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்பாடு வைத்து தேர்தலை சந்தித்தன.

இங்குள்ள 26 -வது வார்டு அடங்கிய பழைய மாலக்பேட்டை பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வார்டில் உள்ள 69 பூத்துகளில் அதிகாலையிலேயே வந்திருந்து காம்ரேட்டுகள் காத்திருந்தனர்.

மாநகராட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டளிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் ‘கதிர் அரிவாள்’. ஆனால் வாக்குச்சீட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் சின்னமான ‘அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்’ சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

“மாப்பிள்ளை அவர் தான்… ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என படையப்பா படத்தில் ரஜினிகாந்த், செந்திலை கிண்டல் செய்வது போல்,..வேட்பாளர் பெயர் சரியாக இருந்தது, ஆனால் சின்னம் மாறி இருந்தது.

வாக்குச்சீட்டில் கதிர் அரிவாளை காணாததால், தோழர்கள், அதிர்ச்சி அடைந்தனர். “சின்ன தப்பு நடந்து போச்சு” என சமாளித்த தேர்தல் ஆணையம், அந்த வார்டில் தேர்தலை ரத்து செய்துள்ளது. அந்த வார்டுக்கு உட்பட்ட 69 பூத்துகளில் நாளை (வியாழக்கிழமை) மீண்டும் வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்த மறு நிமிடம், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை (EXIT POLLS) வெளியிட பல டி.வி. சேனல்கள், நேரலைக்கு தயாராகி சிறப்பு விருந்தினர்களை தங்கள் ஸ்டூடியோவுக்கு அழைத்திருந்த நிலையில், நாளை மாலை வரை கணிப்புக்கு தடை போட்டுள்ளது, தேர்தல் ஆணையம்.

– பா. பாரதி