ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும் என்று தாங்கள் நம்புவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்கும் திரு ப சிதம்பரம் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். நம்முடைய அரசின் நிர்வாக முறையில் எந்த ஒரு முடிவும் தனி ஒரு மனிதரால் எடுக்கப்படுவதில்லை. அனைத்து முடிவுகளும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்படுகிறது. அவை கோப்புகளிலும் குறித்து வைக்கப்படுகிறது. பன்னிரெண்டு அதிகாரிகள், ஆறு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட, அனைவரும் ஆலோசித்த பிறகே ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதன் பிறகே ப.சிதம்பரம் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

அதிகாரிகள் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், இறுதியாக கையெழுத்திட்டு, ஒப்புதல் வழங்கிய ப.சிதம்பரம் மட்டும் எப்படி தவறு செய்திருப்பார் ? இது போல் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும், அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டினால் மொத்த அரசு இயந்திரமும் முடங்கிவிடும். இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலை நிறுத்தும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.