வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

ளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன்  வழங்கி உள்ளது.

காவிரி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள்  போராட்டம் நடைபெற்று வந்தது.

கடந்த ஏப்ரல் 10-ந்தேதி  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, நெய்வேலி அனல்மின் நிலையமும் முற்றுகையிடப்பட்டது.

இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல, ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது  உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர். இந்த இரு வழக்குகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை  புழல், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் வேல்முருகன் மீது தேச துரோக வழக்கும் பாய்ந்தது.

இந்த வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமின் வழங்க வழங்க வேண்டும் எனறும் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே,  உளுந்தூர்பேட்டை , கடலூர் கோர்ட்டில் தள்ளுபடி ஆனதை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வேல்முருகனின்  ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேல்முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு தேசதுரோக வழக்கு மற்றும் சுங்கக்சாவடி தாக்கப்பட்ட வழக்கு இரண்டிலும் நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.