லக்னோ:

ந்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவிஎம் மெஷின் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், அதன் காரணமாகவே பாஜக வெற்றி பெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  மின்னணு முறையிலான வாக்குபதிவு இயந்திரத்தை கைவிட்டு விட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் கட்சியும் வலியிறுத்தி உள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம், முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும்,
மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்த முறையையே கடைபிடிக்கின்றன என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.  ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என  கூறி உள்ளார்.