வெற்றிக்கான சுமையை சென்னை அணியினர் பகிர்ந்து கொள்வர் – புகழும் டூ பிளெசிஸ்

கேப்டவுன்: ஐபிஎல் சென்னை அணியின் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றும், வெற்றிக்கான சுமையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் சென்னை அணிக்காக விளையாடியுள்ள தென்னாப்பிரிக்காவின் டூ பிளெசிஸ்

அவர் கூறியுள்ளதாவது, “சென்னை அணியின் டிரெஸ்ஸிங் அறை அமைதியானது. சூழலுக்கு ஏற்ற வகையில் சிந்திக்கவல்ல வீரர்கள் நிறைய பேர் அந்த அணியில் இருப்பர். எவரேனும் ஒருவர் அணியை, வெற்றிக்கு இட்டுச் சென்று விடலாம் என்று தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் ஜொலிப்பர். வெற்றிக்கான சுமையானது பகிர்ந்து கொள்ளப்படும். பெர்குசன் பயிற்சியாளராக பணியாற்றியபோது, கோப்பைகளை வாரிக்குவித்த இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் நினைவுதான் வருகிறது சென்னையைப் பற்றி நினைக்கும்போது!

அந்தக் கால்பந்து அணியில், கடைசி நிமிடத்தில் கோலடித்து வெற்றியை தமதாக்கிவிடுவர். இதேபோலத்தான் சென்னை அணியும் வல்லமையுடையதாக உள்ளது” என்று ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் டூ பிளெசிஸ்.