சென்னை: சமீப காலமாக அதிமுக பாஜக உடையே முட்டல் மோதல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மாலை  சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், பாஜக தனித்து நின்று போட்டியிட்டால், நோட்டா ஓட்டுக்கள் கூட வாங்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். ஒவ்வொருமுறை தேர்தலின் போதும் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்துகொண்டு தேர்தலை சந்திப்பதும், தேர்தல் முடிந்த பிறகு, அவர்களை சீண்டுவதும் தொடர்ந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாஜக, அதிமுக குறித்து, அதன் தலைமை மற்றும் ஆட்சி குறித்தும் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

அதுபோல, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இழுபறி தொடர்பாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டும், பாஜக தலைவர்களின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது அதிமுக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவில் ஆளாளுக்கு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று எரிச்சல்பட்ட நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனோ பாஜக இல்லாமலும், அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அதுபோல, திமுகவில், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை இன்று மாலை  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.  சட்டமன்றத் தேர்தல்  கூட்டணி தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்திக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.