அமராவதி:

ந்திர மாநிலத்தில் இன்று பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட  மோதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175  சட்டப்பேரவை தொகுதிகளுக்கும்  இன்று   வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதுபோல ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,  பவன் கல்யானின் ஜனசேனா ஆகிய  கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளுக்கு 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,93,45,717 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல்ஆணையம் தெரிவித்து உள்ளது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டினார்.

தேர்தலில் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன்கல்யாண் உள்பட திரையுல நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இன்றைய வாக்குப்பபதிவின் போது சுமார் 25 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக செயல்பட வில்லை. இதன்காரணமாக பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானது. சில இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு மாற்றி பதிவாவதாகவும் புகார் எழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடப்பா தொகுதியில் வாக்குச்சாவடியில்உள்ள எலக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரம், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி சிலர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறிது நேரம்  வாக்குச்சாவடி  மூடப்பட்டது காவல்துறையினர் பலப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சீரானதும் வாக்குப்பதிவு தொடங்கியது.

பல இடங்களில் வாக்குச்சாவடிக்கு வெளியே  தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருருக்கும் இடையே வாக்காளர்களை இழுப்பதில் மோதல் ஏற்பட்டன. பந்தர்லாப்பள்ளியில், இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

அதுபோல குண்டூர் மாவட்டத்தில்  குரஜாலா தொகுதிக்குட்பட்ட உள்ள ஸ்ரீநிவாசபுரம் கிராமத்தில் உள்ள  வாக்குச்சாவடியிலும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர்.

சேட்டனபள்ளி தொகுதியில்  நடைபெற்ற மோதலில் தெலுங்கு தேச நிர்வாகி கொடிலா சிவ பிரசாத ராவ் தாக்கப்பட்டு மயக்கமடைந்தார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அனந்தபுரம் மாவட்டம் தாடி பத்திரியில் நடந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும்  பலியானதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆந்திராவில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தேர்தல்ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.