டெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகவை தற்போது வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாநில வாரியாக தேர்ச்சி விவரம் குறித்த பட்டியலில் திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை என்டிஏ இணையதளத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அதற்கு பிரிண்டிங் தவறு என காரணம் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது புதிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

5 மாநிலங்களின் புள்ளிவிவரத்தில் ஏற்பட்ட தவறு சரி செய்யப்பட்டுள்ளது. திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநில தேர்வு பகுப்பாய்வு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது/
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 57.4 சதவீதம் ஆகும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதால் அந்த மாநிலம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்டில் 12,047 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் திருத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான பட்டியலில்,  திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாகலவம், உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சியடைந்தாக பட்டியலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.