பாட்னா:
த்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப்பிடித்தே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரியங்கா காந்தி, வரும் நவம்பரில் அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 27 ஆண்டுகள ஆகிவிட்டன. வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காந்திய கிசான் யாத்திரை என்ற பெயரில் தனது 2,500 கிலோ மீட்டர் பிரசார பயணத்தை அடுத்த வாரம் நிறைவு செய்கிறார்.
images
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தனது அடுத்த திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.   அரசியலில் இருந்து விலகியிருந்த பிரியங்கா காந்தியை, காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்துக்காக களம் இறக்க உள்ளது. நவம்பர் மாத  இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பிரியங்கா தனது தேர்தல் பிரசாரத்தை உத்தரப்பிரதேசத்தில் தொடங்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 பிரசாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஓருவர் கூறுகையில், “இதற்கு முன், பிரியங்கா காந்தி, தனது  தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி ஆகியோருக்காக அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்திருக்கிறார். முதல் முறையாக அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
எப்போதும் இல்லாத வகையில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் அடித்தட்டு மக்கள், விவசாயிகள் ஆகியோருடன் அமர்ந்து பேசிவரும்,  கட்டில் சபா பிரசாரம் மிகப்பெரிய தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும். பிரதமர் மோடி தனது பிரசாரத்தை இன்னும் தொடங்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே ராகுல்காந்தியின் பிரசாரத்தால் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ள நிலையில் பிரியங்கா காந்தியின் பிரசாரம் மேலும் வலுசேர்க்கும்” என்று அவர் தெரிவித்தார்.