ஆட்சிக்கு வந்தால் 18% மட்டுமே ஜி எஸ் டி : காங்கிரஸ் அறிவிப்பு

க்னோ

தாங்கள் 2019ல் ஆட்சி அமைத்தால் தற்போதைய ஜி எஸ் டி விதிமுறைகள் முழுமையாக மாற்றப்படும் என உ பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறி உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டது.   அந்த அமுலாக்கத்துக்கு முன்பிருந்தே ஜி எஸ் டிக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.  ஜி எஸ் டி விகிதத்தில் பல குழப்பங்களும்,  அதை களைய பல மாறுதல்களும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.    இன்னமும் ஒரு நிலையான ஜி எஸ் டி என்பது முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று ஜி எஸ் டி குறித்து உத்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், பிரபல இந்தி நடிகருமான ராஜ் பப்பர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஜி எஸ் டி பற்றி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  அவர், “தற்போதைய ஜி எஸ் டி என்பது ஒரு முடிவடையாத கதை போல் உள்ளது.  இது மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.   விலைகளும் குறையவில்லை.  எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஜி எஸ் டி யை முழுவதுமாக மாற்றி அமைப்போம்.   அந்த புதிய முறை மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் சுலபமாக அமையும்.

காங்கிரஸ் அரசு ஜி எஸ் டி கொண்டுவர முயலும் போது வரிகளின் அதிகபட்ச விகிதங்கள் 12-18% இருக்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது.  நாங்கள் ஆட்சிக்கு வரும் போது அனைத்துப் பொருட்களும் ஜி எஸ் டி யின் கீழ் கொண்டு வந்து அதிகபட்ச ஜி எஸ் டி 18%க்கு மிகாமல் அமைப்போம்.” என தெரிவித்துள்ளார்.