பாபாவின் ஷீரடியில் மோடி பொய் சொல்கிறார்: காங்.தலைவர் அசோக் சவான் குற்றச்சாட்டு

மும்பை:

பாபா பிறந்த மண்ணில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்.. அவருக்கு ஞானத்தை வழங்க சாய்பாபாவிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும்,  மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டியது என்றும், பாஜக அரசு 1.25 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டி வழங்கி உள்ளதாக  பாபாவின் ஷீரடியில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று கடுமையாக சாடி உள்ளார்.

ஷீரடியில் சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகளை வழங்கி பேசினார்.

அப்போது,  நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சியில் 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் இந்த சாதனை செய்திருப்பதாகவும், ஆனால்,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு  2004 ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டியது என்றும், காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கம் வறுமை ஒழிப்பு பற்றி தீவிரமாக இல்லை  குறை கூறியிருந்தார்.

மோடியின் பேச்சுக்கு  மகாராஷ்டிரா மாநிலமுன்னாள் முதல்வர் சவான் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார். சாய்பாபிவின் மண்ணில் வந்து பிரதமர் மோடி பொய் பேசுகிறார் என்று கூறி உள்ளார். பிரதமரின் பொய்யான தகவல் சாய்பாபா பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறி உள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2013 வரை 2,24 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்றும், ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, 2014ம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற சவான், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் போது 2008ம் ஆண்டு முதல் 2013 வரை 1.28 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு 1.17 லட்சம் வீடுகள் கட்டப்பட்டது என்றும் கூறி உள்ளார்.

ஆனால் பிரதமர் மோடி சர்தார்பட்டேல் தேசிய வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 2 ஆயிரம்கோடிவீடுகள் 2022ம் ஆண்டுக்குள் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு (2017) ஜூலை 10ந்தேதி அறிவித்தார் ஆனால், 1.33 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளது என்று கூறினார்.

பிரதம மந்திரி சத்தியத்தை பேசுவதற்கு ஞானத்தை வழங்க சாய்பாபாவிடம் நான் பிரார்த்திக்கிறேன்  என்றும் சவான் தெரிவித்து உள்ளார்.