காந்திநகர்

குஜராத் அரசு கொரோனா பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது

கொரோனா இரண்டாம் அலை பரவலால் தினசரி கொரோனா பாதிப்பும் கொரோனா மரணமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அரசு வெளியிட்டுள்ள செய்தியின் படி குஜராத் மாநிலத்தில் நேற்றுவரை 7,03,594 பேர் பாதிக்கப்பட்டு அதில் 8,629 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,63,133 குணம் அடைந்து 1,31,832 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆனால் இது தவறான கணக்கெடுப்பு எனத் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.  குறிப்பாக கொரோனா மரண எண்ணிக்கை மிகவும் குறைத்துக் காட்டப்படுவதாகக் காங்கிரஸ் கட்சி குறை கூறி வருகிறது.  இது குறித்து குஜராத் மாநில காக்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா, “குஜராத் மாநிலத்தில் இதை விட அதிக மக்கள் தொகை கொண்ட அகமதாபாத், சூரத், ராஜ்கோட் மற்றும் வடோதரா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

குறைவான மக்கள் தொகை கொண்ட சுரேந்திர நகர் மாவட்டத்தில் அரசு பதிவுகளின்படி கடந்த 65 நாட்களில் 3,163 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.   இதே ரீதியில் கணக்கிட்டால் மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கலாம்.  கொரோனா பிரச்சினையை அரசு தவறாகக் கையாள்வதால் இத்தனை மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாகத் தினசரி எத்தனை கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் கொரோனா அல்லாத மரணங்கள் எத்தனை என்பதைத் தெரிவிக்க வேண்டும்.    கொரோனா மரணம் அடைந்தோரில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள்.  எனவே கொரோனாவால் மரணம் அடைந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் குறைந்தது. தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும்.

கொரோனாவால் மரணம் அடைவோரில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைகின்றனர்.  எனவே அரசு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கை, கொரோனாவுக்கான மருந்து கையிருப்பு,  கொரோனா சிகிச்சை வசதிகள் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தில்  கொரோனாவால் மரணம் அடைவோரில் 75% பேர் கிராமப்புறங்களை சேர்த்தவர்கள் என்பதால் அந்த பகுதிகளில் நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும்.  மீண்டும் மூன்றாம் அலை கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில பாஜக அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.