பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்.. கூடுதல் தொகுதிகள் கேட்டு தோழமை கட்சிகள் முரண்டு..

பீகார் தேர்தல் களத்தில் -கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் முரட்டு இளைஞர்கள் போல்- இரண்டு வலுவான அணிகள் முண்டா தட்டி நிற்கின்றன.

ஒரு அணியான பா.ஜ.க, ஆர்.ஜே.டி.மற்றும் பஸ்வானின்.எல்.ஜே.பி கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டு பிரச்சார களத்துக்கு வந்து விட்டன.

எதிரே உள்ள காங்கிரஸ் அணி பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளது.அந்த அணியில் காங்கிரசுடன் , ஆர்.ஜே.டி, சி.பி.ஐ. உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்துள்ளன.

முதல் கட்ட தேர்தலுக்கு  மனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

அங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகள் கேட்கிறது.

பீகாரில் தொகுதிகளை பங்கிட்டுக்கொடுக்கும் நிலையில் உள்ள  பெரிய கட்சியின் தலைவரான லாலு சிறையில் இருப்பதால்- அடுத்த நிலையில் உள்ள அவர்  மகன் தேஜஸ்வி யாதவால் –கூட்டணி கட்சிகளை ‘டீல்’செய்ய முடியவில்லை.

எனினும் தகவல் அறிந்த வட்டாரத்தில் விசாரித்த வகையில் சிறு கட்சிகளுக்கு தொகுதிகள் இப்படி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது:

சரத்யாதவ் தலைமையிலான லோக் தந்திரிக் ஜனதா தளம், ஜிதாம் ராம் மஞ்சியின் எச்.ஏ.எம், மற்றும்  வி.ஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும்.

இடதுசாரிகளுக்கு 2, ஆர்.எல்.எஸ்.பி.கட்சிக்கு 3 என கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி