ஆர்.கே.நகரில் திமுக தோல்வி: காரணத்தை அறிய காங்கிரசும் குழு அமைப்பு

சென்னை,

ஆர்.கே நகரில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மருதுகணேஷ் படுதோல்வி அடைந்தார். அதற்கான காரணத்தை அறிய திமுக குழு அமைத்துள்ள நிலையில், காங்கிரசும் தனியாக தேர்தல் தோல்வி குறித்து ஆராய  குழுவை அமைத்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை தாண்டி, சுயேச்சை யாக போட்டியிட்ட டிடிவி அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்தது.

இந்நிலையில், திமுக தோல்வி குறித்து ஆராய குழுவை அமைத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து,  திமுக காங்கிரஸ் கூட்டணி தோல்வி காரணத்தை அறிய காங்கிரஸ் சார்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.தாமோதரன் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அமைத்துள்ளார்.

இந்த குழுவில்,  கீழானூர் ராஜேந்திரன், சி.டி.மெய்யப்பன், இதயாத்துல்லா, அமெரிக்கை நாராயணன் ஆகிய 4 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான திமுக தோல்வி குறித்து, ஆராய்ந்து. விரிவான அறிக்கை 4 நாட்களில் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.