கொல்கத்தா

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு வங்க மாநிலத் தேர்தலையொட்டி குறைந்த பட்ச பொதுத்திட்டம் தயாரித்து வருகின்றன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.  மாநிலத்தை ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டு 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது.  காங்கிரஸ் இரு தொகுதிகளில் வென்றது.  கம்யூனிஸ்ட் ஒரு  தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2016 ஆம் வருடம் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன.   ஆனால் வெற்றி பெறவில்லை.  2019 மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியாததால் கூட்டணி ஏற்படவில்லை.    இனி வரும் 3 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன

தற்போது மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருவதாலும் திருணாமுல் காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சியாக இருப்பதாலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி இணைந்து ஒரு குறைந்த பட்ச பொது திட்டத்தை அமைத்து வருகின்றன.  இந்த திட்டம் குறித்த அறிவிப்புக்கள் தீபாவளிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சோமென் மித்ரா தெரிவித்துள்ளார்.