டெல்லி சட்டமன்ற தேர்தல்: 6 குழுக்களை நியமித்தது காங்கிரஸ் கட்சி

 டெல்லி:

டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு தோதல் குழுக்களை அக்கட்சியின் தேசியத் தலைவா் சோனியா காந்தி  நியமித்து உள்ளார்.

டெல்லியில் தற்போது, முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.  டெல்லி சட்டமன்றத்தின்  பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.  இந்த நிலையில், இதையடுத்து டெல்லி மாநில சட்டசபை  தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரசும், ஆட்சியை தக்க வைக்க ஆம்ஆத்மி கட்சியும் தீவிர முயற்சிகளை  எடுத்து வருகின்றன. தேர்தலை சந்திக்க கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. ஏற்கனவே  மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மாநில மக்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி   வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டெல்லி சட்டப்பேரவையின் தோதல் பணிக் குழுவின் தலைவராக டெல்லி காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா உள்பட 56 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சா் அஜய் மாக்கன் தலைமையில் 69 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரசாரக் குழுவின் தலைவராக கீா்த்தி ஆசாத் தலைமையில் 165 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்ட உள்ளது.

விளம்பரக் குழுவுக்கு ஜே.பி. அகா்வால் தலைமையில் 164 பேர் கொண்ட குழுவினரும், 

அரவிந்தா் சிங் லவ்லி தலைமையில் 65 பேர் கொண்ட மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

104 உறுப்பினர்களைக் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழுவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை ஆம்ஆத்மி கட்சி  தேர்தல் சாணக்கியர் என கூறப்படும்  அரவிந்த் கிஷோரின் “இந்தியன் PAC” உடன்  இணைந்து எதிர்கொள்கிறது.