டில்லி

சீன ராணுவத்தினர் கிழக்கு லடாக்கில் இந்தியா மீது நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

சீன எல்லையான லடாக் பகுதியின் பாங்காங் ஏரி, மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் சுமார் 2500க்கும் அதிகமான சீன வீரர்கள் கடந்த மாதம் குவிக்கப்பட்டனர்  இதையடுத்து இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தன.   இந்த பகுதியில் இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க இரு தரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 12 முறையும் மேஜர்கள் மட்டத்தில் 3 முறையும் பேச்சு வார்த்தை நடந்தன.  இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 6 ஆம் தேதி வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது.

இதன் அடிப்படையில் இரு நாடுகளும் கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப்பெற முடிவு செய்து அதற்கான பணிகள் தொடரப்பட்டது.   இந்த சமயத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு அதில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.  இதைப் போல் சீனா தரப்பில் 5 பேர் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ராணுவத்தின் மீது இந்திய ராணுவத்தினர் எல்லை மீறி வந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளது.   இங்கு ஏற்பட்டுள்ள பதட்டத்தைத் தணிக்க ராணுவ மேஜர் மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்த நிலை குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் முப்படை தளபதிகள், பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா,”இந்திய ராணுவத்தினர் மீது சீன எல்லையில் நடந்த தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டறிந்தேன்.  மத்திய அரசு இந்த நேரத்தில் நாட்டுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் செயல்பட வேண்டும்.  நாட்டின் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து அங்கு நடந்த விவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இந்தியச் சீன எல்லைப் பிரச்சினையில் எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லை.   ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு ஆகியவற்றை மீறி சீனா நடந்துள்ளது.  இது நாட்டுக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.   இது நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை உண்டாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.