பாஜக 272 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் எதிர்கட்சியாக அமருமா : காங்கிரஸ் கேள்வி

டில்லி

பாஜக வுக்கு வரும் மக்களவை தேர்தலில் 272 இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமருமா என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேட்டுள்ளார்.

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது பிரதமர் மோடியை சற்றே கலங்க வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று சூரத் விமான நிலையத்தின் புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர், “கடந்த 30 வருடங்களாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இன்றி தொங்கு பாராளுமன்றம் இருந்து வந்தது. அதனால் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலை ஏற்பட்டது.  ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கூட்டணி அமைச்சரவை ஒத்து வராது.” என தெரிவித்தார்.

மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், “பிரதமர் மோடி கூட்டணி அரசுகளை குறை கூறி வருகிறார். இது மிகவும் தவறானது. கூட்டணி அரசுகளால் முன்னேற்றம் ஏற்படாது என தெரிவிக்கும் மோடியின் பாஜக  வரும் மக்களவை தேர்தலில் தனித்து 272 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் கூட்டணி அரசு அமைக்க முயலாதா ?  அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர மோடி தயாராக இருக்கிறாரா?

மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள கூட்டணி அரசில் பாஜக இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலங்கள் முன்னேற்றம் அடையாது என மோடி நினைக்கிறாரா?  ஆகவே அந்த மாநிலங்களின் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகுமா? அது மட்டுமின்றி பெரும்பான்மை பெறாத மாநிலங்களான கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக ஏன் அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது?” என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.