தன் பொறுப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட மோடி – காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

புதுடெல்லி: நாட்டைக் காப்பாற்றும் அனைத்துப் பொறுப்புகளையும் தன்னளவில் கைவிட்டு, அதை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் கைகளில் விட்டுவிட்டார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அஜய் மக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரதமர் இந்த நாட்டிற்கு ஆற்றிய உரை, வெற்றுரையே தவிர வேறல்ல. நாடு, இதற்கு முன் கண்டிராத நெருக்கடியையும், பேரழிவையும் நோக்கி சென்று கொண்டுள்ளது. கொரோனா சோதனைக்கு ஒருநாளும், அதன் முடிவுகள் தெரிவதற்கு, அடுத்த சில நாட்களும் ஆகின்றன.

மருத்துவமனைகளில், படுக்கைகள் இல்லை, உயிர் காக்கும் மருந்துகளுக்கும், ஆக்ஸிஜனுக்கும் பற்றாக்குறை. பொதுவான மருந்துகளும் கள்ளச் சந்தையில் விற்பனையாகின்றன. நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்லாடுகின்றன. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள், மீண்டும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கே திரும்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த முழுமையான பேரழிவு சூழலில், நாட்டிற்கு உரையாற்றும் பிரதமர் மோடி, சுகாதார சூழலை அதிகரிக்கும் வகையில், அதாவது, ஆக்ஸிஜன் சப்ளையை சீர்செய்தல், மருத்துவமன‍ை படுக்கை வசதிகளை அதிகரித்தல், உயிர்காக்கும் மருந்துகளை தடையின்றி கிடைக்கச் செய்தல், வென்டிலேட்டர் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட அம்சங்களில், அரசு என்னமாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைப் பற்றி பேசுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரதமரோ, தனது பொறுப்புகள் அனைத்தையும் துறந்துவிட்டு, அனைத்தையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளிடம் ஒப்படைத்து விட்டதுபோல் பேசுகிறார். முழு அடைப்பை கொண்டுவராதீர்கள் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூறுவதன் மூலம், தன்னால் செய்ய இயன்ற குறைந்தபட்ச விஷயத்தையும் மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டார் மோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.