புதுடெல்லி: எண்ணெய் இறக்குமதி மற்றுமூ ஜிஎஸ்பி ரத்து ஆகிய அமெரிக்காவின் இரட்டை நெருக்கடிகளுக்கு மோடி அரசு பணிந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவுடனான சிறப்பு ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி -யை அமெரிக்கா ரத்துசெய்திருப்பதை அடுத்து, கடுமையாக பாதிக்கப்படவுள்ள இந்திய ஏற்றுமதியை காக்கும் வகையில், நம்பிக்கையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இந்த இக்கட்டான சூழலை அரசு எப்படி கையாளப் போகிறது என்பது குறித்து விளக்கும் வகையில் ஒரு விரிவான அறிக்கையை அரசு சார்பில் வெளியிட வேண்டுமெனவும் அக்கட்சி கோரியுள்ள அதேநேரத்தில், இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளதாவது, “அமெரிக்க‍ நெருக்கடியின்படி, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்ட நிலையில், தற்போது சிறப்பு ஏற்றுமதி சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது.

கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பான நடவடிக்கை அமெரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்டபோதும், இந்திய அரசின் சார்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சூழலை சமாளிப்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்றார்.