புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வெளிநாட்டு தூதுவர்களுடனான விருந்து நிகழ்ச்சி ரத்து: அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி:

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக, வெளிநாட்டு தூதுவர்களுடன் நடைபெற இருந்த விருந்து நிகழ்ச்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.


இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, தீவிரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேருக்கு ஒற்றுமையுடன் வீர வணக்கம் செலுத்துவோம்.

ஜி20 நாடுகளின் தூதுவர்களுடனான விருந்து நிகழ்ச்சியை வெள்ளியன்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்க இருந்தனர்.

உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.