டில்லியில் மரங்களை வெட்டும் பைத்தியகார செயலை தடுக்க வேண்டும்…ராகுல்காந்தி அழைப்பு

டில்லி:

டில்லியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மரங்களை வெட்டும் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் பைத்தியக்கார செயலை எதிர்த்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ கடந்த 4 ஆண்டுகளில் பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் டில்லியில் இருந்த ஆயிரகணக்கான மரங்களை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக வெட்டியுள்ளன. மனித வாழ்க்கைக்கு மரங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகள் கூட புரிந்து கொண்டுள்ளனர். இந்த பைத்தியகரமான செயலை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு டில்லியில் 25 ஆயிரம் அரசு குடியிருப்புகள் கட்ட 14 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.