பனாஜி:

கோவாவில் தனிப்பட்ட முறையில் தனது தாயாருடன்  ஓய்வெடுத்து வரும் ராகுல்காந்தி, இன்று திடீரென கோவா முதல்வர் அலுவலகம் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசினார். இது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வரும் கோவா முதல் மனோகர் பாரிக்கரை இன்று கோவா தலைமை செயலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது, அவரது  உடல் நலம் பற்றி ராகுல் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரஃபேல் போர் விமானம் தொடர்பான ரகசியங்கள் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.  இது குறித்து காங்கிரஸ் கட்சியும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியது.

இந்தச் சூழ்நிலையில், கோவாவில் தனது தாயார் சோனியா காந்தியுடன்  ஓய்வெடுத்து வரும் ராகுல் காந்தி, இன்று  மதியம்  திடீரென கோவா முதல்வர் அலுவலகத்துக்கு சென்று  பாரிக்கரை சந்தித்துப் பேசினார். மதியம் 12 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

பாரிக்கரின்  உடல்நலனை விசாரிப்பதற்காகவே ராகுல் காந்தி சந்தித்ததாக கோவா காங்கிரஸின் மூத்த தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், ராகுல் பாரிக்கர் சந்திப்பு பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவா முதல்வருடனான சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  இன்று பகல்  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்தேன். இது ஒரு தனிப்பட்ட விஜயம் என்றும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் கூறி உள்ளார்.

மேலும், இன்று மாலை கேரளா செல்கிறேன். கொச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி ஏஜண்டுகள் கூட்டத்தில் பேசுகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.