Random image

21எம்எல்ஏக்கள் ஆதரவு: கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

பனாஜி:

கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தங்களுக்கு 21 எமஎல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார்.

இதனால் கோவாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரசை ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா அழைப்பாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலமில்லாமல் தற்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரி உள்ளது.

கவர்னரிடம் ஆட்சி அமைக்க மனு கொடுத்துள்ள காங்கிரசார்

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் அரசு சம்மந்தப்பட்ட வேலைகளை அவரால் சரிவர கவனிக்க இயலவில்லை என தெரிவித்து அவர் பதவி விலகுவதாக பாஜ தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பாஜகவோ, மனோகர் பரிக்கர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என கூறி உள்ளது. மேலும் வேறு முதல்வரை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வரு கிறது.

40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் சேர்ந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் மனு அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை தெரிவித்து உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர்.   கர்நாடகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முன்மாதிரியாக கொண்டு, காங்கிரசை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும்,  கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரசை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை என்பதையும் நினைவுபடுத்தினார்.

தற்போது மாநிலத்தில் ஆட்சி அமைக்க போதுமான பலம் காங்கிரசிடம் உள்ளது என்று கூறினார். எங்களிடம் தேவையான எண்ணிக்கை இருப்பதாகவும், ஆனால், அது யார் என்பதை தெரிவிக்க முடியாது என்றும், தங்களுக்கு மொத்தம் 21 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய  பாஜக ஆட்சி, கோவா பார்வர்டு கட்சி (ஜிஎப்பி) மற்றும்  மகாராஷ்டிரவாதிகோமந்த் கட்சி (எம்ஜிபி) மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிற்து.

தற்போது அங்கு ஆட்சி சரியில்லை என்பதால்,  மற்ற கட்சியை சேர்ந்தவர்கள்  தங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். தற்போது தங்களுக்கு  மெஜாரிட்டி உள்ளது.  எனவே, கவர்னர்  தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், மாநில பாரதியஜனதா கட்சியினர், கூட்டணி கட்சிகளை தக்க வைக்கும் முயற்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூத்த அமைச்சரை முதல்வராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.