Random image

நிலக்கரி இறக்குமதியில் ரூ.29000 கோடி ஊழல் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதிக விலைக்கு பில் அளித்து ரூ. 29000 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

பாஜக அரசின் மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.     அவற்றில் மிகவும் முக்கியமானது ரபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த புகார் ஆகும்.  இந்த குற்றச்சாட்டை பாஜக தொடர்ந்து மறுத்து வந்தாலும் இது குறித்த விவரங்களை வெளியிடாமல் உள்ளது.   அத்துடன் அடுத்த படியாக நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கூறி வருகிறது.

குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் நிலக்கரி இறக்குமதி செய்ததாக பல ஆவணங்களை அரசுக்கு அளித்துள்ளன.   அரசு நிர்ணயித்த விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது.   அதே விலைக்கு பல நாடுகள் நிலக்கரி விற்க தயாராக இருந்த போது இந்தோனேசியாவில் இருந்து அதிக விலைக்கு நிலக்கரி வாங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ”இந்த தனியார் நிறுவனங்கள் உண்மையான விலையை விட அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்துள்ளதாக போலி ஆவணங்கள் வழங்கி உள்ளன.   அந்த வகையில் ரூ.29000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.

இவ்வாறு அதிக தொகைக்கான ஆவணங்கள் அளித்த நிறுவனங்களில் பிரதமருக்கு மிகவும் வேண்டியவரான அதானியின் நிறுவனமும் உள்ளது.  அத்துடன் எஸ்ஸார் குழுமம்,  அம்பானியின் நிறுவனம் ஆகியவைகளும் இவ்வாறு அதிக விலைக்கான ஆவணங்கள் அளித்துள்ளன.

இவ்வாறு ஊழல் புரிந்த 40 தனியார் நிறுவனங்கள் மீது உடனடியாக விசேஷ  புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  இந்த இறக்குமதியில் சுமார் 70% அதானி குழுமத்தால் இறக்குமதி செய்யபட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதானி குழும அதிகாரி ஒருவர், “அதானி குழுமம் என்றுமே தவறான செய்கைகள் செய்யாது.   அவ்வாறு செய்வது நிறுவனத்துக்கு  பிடிக்காது.  அத்துடன் இது நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் அதிகம் கருத்து கூற இயலாத நிலையில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.