டில்லி

ராஜிவ் காந்தியை ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழி என மோடி கூறியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

பிரதமர் மோடி உத்திரப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை அன்று ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், “ராகுல் காந்தி தனது கட்சியினர் குற்றமற்றவர் என காட்டிக் கொள்ள என் மீது புகார் கூறி வருகிறார்.  அவருடைய தந்தை மறைந்த ராஜிவ் காந்தியை காங்கிரஸார் குற்றமற்றவர் என கூறி வந்தனர்.   ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக மரணம் அடைந்தார்” என பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் இந்த விமர்சனத்துக்காக பிரதமர் மோடியை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.    மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தனது டிவிட்டரில் மோடியை இந்த விமர்சனத்துக்காக நாடு மன்னிக்காது என தெரிவித்துள்ளர்.

மோடியின் விமர்சனம் குறித்து உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்துக்கு நேற்று ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளது.    அந்த கடிதத்தில், “பாரத ரத்னா விருது பெற்ற ஒரு தியாகியின் பெயரை மோடி அவமானம் செய்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவர் எனி தேர்தல் பேரணிகளில் பேசுவதை தடை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.