மத்திய அமைச்சரின் தரக்குறைவான பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

சிவபுரி, மத்திய பிரதேசம்

மீபத்தில்  ராகுல் காந்தி  பற்றி பாஜக வின் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் கூறிய கருத்துக்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு இரு தினங்கள் முன்பு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.    குஜராத் தேர்தலில் பாஜக வென்று அரசு அமைத்த போதிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி ஆகி உள்ளது.    இந்த வெற்றிக்கு முழுக் காரணம் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரமே என அனைத்துக் கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலிலும் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரம் ஒரு மாறுதலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இந்நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சனிக்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு ஒரு கருத்து கூறி உள்ளார்.

அவர், “காங்கிரஸ் தலைவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒப்பீடு செய்வதே தவறாகும்.    முகத்தில் உள்ள மீசைக்கும்,  வாலில் உள்ள முடிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு”  என கூறி இருந்தார்.   பாஜக தொண்டர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள், ரிபுன் போரா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் அமைச்சர் இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறு உள்ளனர்.   மேலும் கார்கே, “இவ்வளவு முன் அனுபவம் உள்ள ஒரு பாஜக தலைவர் இவ்வாறு தரக்குறைவாக பேசுவது தவறான செயலாகும்.  இது போன்ற வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது என பிரதமர் அவரை கண்டிக்க வேண்டும்.    இனியும் இது போல பொது இடங்களில் பேசத் தகாத வார்த்தைகளை பாஜக தலைவர்கள் பேசக்கூடாது என பிரதமர் அறிவுறுத்த வேண்டும்”  என நேற்று பாராளுமன்றத்தில் கூறி உள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு குறித்து பாஜக தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை