டில்லி

தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி நிர்ணயிக்கின்றன.  கொரோனா கால கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்தது.  ஆயினும் இந்தியாவில் வரிகள் அப்போது அதிகரிக்கப்பட்டதால் விலை உயர்ந்தன.

இதையொட்டி வரி உயர்வால் மத்திய அரசுக்கு நல்ல லாபம் கிடைத்த போதிலும் வரியைக் குறைக்க எவ்வித திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் கடந்த சுமார் 1 மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் இல்லாத நிலையில் இரு நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளன.

இந்தியாவில் நேற்று பெட்ரோல் டெல்லியில் 84.20, சென்னையில் 86.96, மும்பையில் 90.83, பெங்களூருவில் 87.04 எனவும், டீசல் டெல்லியில் 74.38, சென்னையில் 79.72, மும்பையில் 81.07, பெங்களூருவில் 78.87 எனவும் விற்பனை செய்யப்பட்டது.  டில்லியிலும் மும்பையிலும் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வாகும்.

இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எனப் பல முறையிலும் நாடு சிக்கலைச் சந்தித்துள்ளது.  ஆளும் கட்சி உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்து வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும்” என கூறி உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஜிஎஸ்டி யின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வராமல் அதிக வரியின் மூலம் மத்திய அரசு மக்களை கொள்ளை அடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை அடைந்துள்ளது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.