விஷம் கக்கும்  விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு..

விஷம் கக்கும்  விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு..

ராஜிவ் தியாகி

தனியார் செய்தி சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள், விஷமம் விதைக்கும் நச்சு பிரச்சார மேடைகளாக உருமாறி இருப்பது கடந்த புதன்கிழமை வெட்ட வெளிச்சமானது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி, காசியாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தவாறு, தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, தியாகி மீது, விஷம் தோய்த்த வார்த்தைகள் வீசப்பட்டதால் நிலை குலைந்து சரிந்து விழுந்தார்.

நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜீவ் தியாகி , சிறிது நேரத்தில் இறந்து போனார்.

தொலைக்காட்சிகளில் காங்கிரஸ் முகமாக திகழ்ந்த  53 வயதேயான தியாகியின் அகால மரணம், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஜெர்கில், மத்திய தகவல் –ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவகருக்குத் துக்கம் தோய்ந்த கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.‘ தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களின் ஊடாக குறுக்கீடுகளும், மூர்க்கத்தனமான கருத்துக்களும் , விவாதத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் மனநிலையையும், உடல் நலத்தையும் பாதிக்கிறது’’ என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘’எனவே இது போன்ற விவாதங்கள் நாகரீகமான முறையில்  நடைபெற, நடத்தை விதி முறைகளை உருவாக்கிக் கொள்ளுமாறு செய்தி சேனல்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் அமைச்சர் ஜவடேகரை , காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஜெர்கில் வலியுறுத்தியுள்ளார்.

– பா.பாரதி.