மோடி, நிர்மலா சீத்தாராமன் மீது உரிமை மீறல் தீர்மானம்….காங்கிரஸ் முடிவு

டில்லி:

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். பொய்யான தகவல்களை தெரிவித்ததாக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க தெரிவித்தது.

பா.ஜ.க எம்.பி. பிரகலாத் ஜோஷி, ராகுல்காந்தி மீது உரிமை மீறல் நோட்டீசை தாக்கல் செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது ஏ.கே. அந்தோணி கூறுகையில்,‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன்? என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில்,‘‘பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து விளக்க வேண்டும்’’ என்றார்.

ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில்,‘‘நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார்’’என்றார்.