டில்லி:

மத்திய பணியாளர் தேர்வாணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) தேர்வு தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘வியாபம் ஊழல் போன்று தற்போது எஸ்எஸ்சி ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலைவாய்ப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து டில்லியில் 3 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும், எஸ்எஸ்சி.யும் வாய் திறக்கவில்லை. இதில் எந்த தவறும் நடக்கவில்லை என்றால் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது?. இதற்கு பிரதமர் பதில் கூற வேண்டும். இதை மீடியாக்கள் கவனிக்க வேண்டும்’’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகி குமார் விஸ்வாஸ் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எதிர்பாராதவிதமாக எஸ்எஸ்சி பட்டதாரி அளவிலான தேர்வுத் தாள்கள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் கனவு கலைந்துவிட்டது. லட்சகணக்கானவர்களின் வாழ்க்கையில் மற்றவர்கள் விளையாட யார் அனுமதித்தது?’’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பதிவில், ‘‘இது வெறும் தேர்வு தொடர்புடையது கிடையாது. இதன் பின்னால் அவர்களின் கனவு உள்ளது. இது சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நூற்றுக்கணக்கான நாட்களை செலவு செய்து இரவு பகல் என படித்து தேர்வுக்கு தயாராகி இருந்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் நடந்த இந்த மோசடியை எதிர்த்து ஆயிரகணக்கான மாணவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு எஸ்எஸ்சி தேர்விலும் ஏதேனும் ஒரு மோசடி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் இயல்பான நிலையே இருந்தது கிடையாது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படி பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதை யாரும் காது கொடுத்து கேட்க விரும்பவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஊழல் நிறைந்த இந்த நடைமுறையை வேரறுப்போம்’’ என்றார்.