அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கவில்லை : காங்கிரஸ்

கௌகாத்தி

னைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் வாசனை திரவிய வர்த்தகருமான பத்ருதீன் அஜ்மல் என்பவர் தலைமையில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி இயங்கி வருகிறது.     இவருக்கு அசாமில் வசிக்கும் வங்க மொழி இஸ்லாமியரின் ஆதரவு உள்ளது.   பாஜக வுக்கு எதிராக காங்கிரஸ் அமைக்க உள்ள கூட்டணியில் இணைய அஜ்மலுக்கு விருப்பம் உள்ளது.

இந்த கட்சியின் செயலாளர் அமினுல் இஸ்லாம் நேற்று, “நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.   காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் அமைய உள 18 கட்சிகள் கூட்டணியில் நாங்களும் இணைகிறோம்.   அதனால் தான் சமீபத்தில் ராகுல் காந்தி அளித்த ரம்ஜான் விருந்தில் கலந்துக் கொண்டோம்” என தெரிவித்தார்.

இதற்கு அசாம் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.  அவர், “இது ஆதாரமற்ற செய்தி.   வெறும் வதந்தி.  எங்கள் கட்சித் தலைமை அசாம் பகுதி தலைவர்களை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்காது.”

பாஜக மதச் சார்புள்ள கட்சி என்பதால் காங்கிரஸ் அக்கட்சியை கடுமையாக எதிர்த்து வருகிறது.   அதே நேரத்தில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரு மதச் சார்பான கட்சி தான்.   அவ்வாறு இருக்க காங்கிரஸ் அக்கட்சியுடன் கூட்டணி வைக்காது.   மேலும் அக்கட்சி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வின் இரண்டாம் அணியாக செயல்பட்டது” என தெரிவித்துள்ளார்.