பிரதமர் மோடியுடன் உதய் மகுர்கர்

புதுடெல்லி: மத்திய தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக, குறிப்பாக பத்திரிகையாளர் உதய் மகுர்கரின் தேர்வு தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான யஷ்வர்தன் குமார், நாட்டின் தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்படவிருக்கிறார்.
அதேசமயம், ஊடகவியலாளரான உதய் மகுர்கர், தகவல் ஆணையராக அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பதவிக்கு விண்ணப்பமே செய்யாத இவரை எதற்காக மோடி அரசு தேர்வு செய்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்துத்துவ சித்தாந்தத்தின் மீது நாட்டமும், பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஆதரவும்தான் இவருக்கு இந்தப் பதவியைத் தேடித் தந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ்.
புதிய தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்து விரைவில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு, மத்திய தகவல் ஆணையர்களை தேர்வு செய்துள்ளது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 139 விண்ணப்பங்களும், தகவல் ஆணையர்கள் பதவிக்கு 355 விண்ணப்பங்களும் வந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.