பெங்களூரு:

லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. இதையடுத்து,  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் சுயேச்சைகளுக்கு பதவிகளை வழங்க காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினேஷ் குண்டுராவ், சித்தராமையாவுடன் குமாரசாமி ஆலோசனை

மக்களவை தேர்தல் முடிவைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள் ளது. கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் தலைமை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக  காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோரை காங்கிரஸ் தலைமை கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளது.

லோக்சபா தேர்தலில்  காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் குமாரசாமியின் மகன் போன்றொர் தோல்வியை சந்தித்தனர். இது சர்ச்சையை கிளப்பியது.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மதசார்பற்ற ஜனதாதள எம்எல்.ஏ. கவுரி சங்கர், ‘கூட்டணியில் இடம்பெறாமல் இருந்தால் தேவகவுடா வெற்றி பெற்றிருப்பார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிப்பதை நாங்கள் விரும்ப வில்லை’ என்றார். இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்   காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தகவல்கள் வெளியானது. ரமேஷ் ஜர்கிகோலி மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்தனர்.  அப்போது, அங்கே எடியூரப்பாவும் வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பாவுடன் வந்த பாஜக எம்எல்ஏ அசோக், நாங்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் எதுவும் பேசவில்லை. நாங்கள் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துப் பேசவே அவரது வீட்டுக்கு வந்தோம். பாஜக மூத்தத் தலைவர்கள் கட்சி நிலவரம் குறித்து பேசினார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்களும், கிருஷ்ணாவைப் பார்க்க வந்துள்ளனர். அது கிருஷ்ணா வின் வீடு. அரசியல் கட்சியின் அலுவலகம் அல்ல. இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுயேச்சை எம்எல்ஏக்களான அஜய் சிங், வி.முனியப்பா, எச்.நாகேஷ் போன்ற வர்கள் தங்களுக்கும் பதவி கேட்டு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் பாஜக அணிக்கு தாவ வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மாநில முதல்வரும் ஜனதாதளம் தலைவருமான குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.

அதைத்தொடர்ந்து அதிருப்தியாளர்களை சரிகட்ட அவர்களுக்கு பதவிகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 105 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 79 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவையான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.