வேலூர்: வேலூரில் காங்கிரஸ் நிறுவன தின விழா பொதுக்கூட்டம் டிசம்பர் 28ந்தேதி கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்கவில்லை என கூறி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு நிறுவன தின விழா  மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் 3 வேளாண்  சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் ஏர்கலப்பை சங்கமம்  பொதுக்கூட்டம் வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் 28ந்தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இநத் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தமிழக  பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்  ஸ்ரீ வல்லபிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த கூட்டத்தில்,  மோடி அரசின்  விவசாய விரோத நிலையை அம்பலப்படுத்தும்  வகையில் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.  மேலும், தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பா.ஜ.க.வின் அவதூறு பிரச்சாரங்களையும், மோடியின் விவசாய விரோத நிலையையும் அம்பலப்படுத்தும் வகையில் பிரமாண்டமாக கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாகவும்,  கொரோனா நெறிமுறை விதிகளை மீறியதாகவும், விழாவில் கலந்துகொண்டவர்கள்,  சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக மாநில  தலைவர் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1,000 பேர் மீது வேலூர்  வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.