டெல்லியில் பிரியங்கா காந்தி தலைமையில் அமைதி பேரணி…. வீடியோ…..

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்காத மத்திய மாநில அரசையும் அதிகாரிகளையும் கண்டித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக வை சேர்ந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் பேச்சை வெட்கக்கேடானது என்று வர்ணித்ததோடு, அரசாங்கம் இது குறித்து எதுவும் செய்யாமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்று கூறியிருந்தார்.

கடந்த ஞாயிறன்று டெல்லி காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் கபில் மிஸ்ரா, குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தை நிறுத்தாவிட்டால், தனது ஆதரவாளர்களுடன் வீதியில் இறங்கவேண்டிவரும் என்று வன்முறையை தூண்டும் விதமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தால் அச்சமும் பீதியும் அடைந்துள்ள மக்களிடம் அச்சத்தை போக்கும் விதமாக ‘அமைதி பேரணி’ நடத்தினார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி தலைமையில் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர், பேரணி காந்தி ஸ்ம்ரிதி (பிர்லா இல்லம்) வரை நடைபெறுவதாக இருந்தது.

பேரணியை ஜன்பத் ரோட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைநகர் டெல்லியில் குடியிருக்கும் பல்வேறு தரப்பினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வரலாறு காணாத வன்முறைக்கு பொறுபேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை குற்றம்சாட்டினார். இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது சோனியா காந்தி நேரடியாக குற்றம் சாட்டினார், உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார். இதன் போது, ​​சோனியா காந்தி டெல்லி வன்முறை குறித்து மோடி அரசிடம் ஐந்து கேள்விகளையும் கேட்டார்.