சத்தீஸ்கர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்: 10 மாநகராட்சிகளை அள்ளியது

ராய்பூர்: சத்தீஸ்கரில், 10 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

10 மாநகராட்சிகள், 38 நகராட்சி மன்றங்கள் மற்றும் 103 நகர் பஞ்சாயத்துகள் அடங்கிய 151 நகர அமைப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 21 அன்று நடைபெற்றது. அதில் 2,834 வார்டுகளில் 1283 ஐ காங்கிரஸ் வென்றது. பாஜக 1131 வார்டுகளை வென்றது.

10 மாநகராட்சிகளில், ஜகதல்பூர், சிர்மிரி மற்றும் அம்பிகாபூர் ஆகிய இடங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது. ராய்ப்பூர், பிலாஸ்பூர், துர்க், ராஜ்நந்த்கான், ராய்கர், தம்தாரி, கோர்பா ஆகிய 7 இடங்களில், காங்கிரஸ் சுயேச்சைகளின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது.

கோர்பாவின் மேயராக காங்கிரசின் ராஜ்கிஷோர் பிரசாத் தேர்ந்து எதெடுக்கப்பட்டு உள்ளார். அவர், பாஜகவின் ரித்து சவுராசியாவை 36 வாக்குகள் பெற்று தோற்கடித்தார். பாஜக வேட்பாளர் 33 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

67 உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சியில் பாஜக 31 வார்டுகளை வென்றது, காங்கிரஸ் 26 இடங்களை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ (எம்), ஜேசிசி (ஜே) மற்றும் சுயேச்சைகளைச் சேர்ந்த 8 உறுப்பினர்களுடன் நகராட்சியை கைப்பற்றியது. மாநிலத்தில் மேயர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.