மாணவர்கள் மீதான தாக்குதலை தூண்டுவதோடு, அரசு அதை ஊக்குவிப்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர், பல்கலை மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் மீது சராமரி தாக்குதல் நடத்தினர். முகமூடி அணிந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கியதாக கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். இரும்பு தடிகளை கொண்டு கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் மர்மநபர்கள் தாக்கியதில், பலர் பலத்த காயமடைந்தனர். இத்தாக்குதலில் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலையை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாக்குதலில் படுகாயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், “சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்தேன். பலருக்கும் கை மற்றும் கால் எழும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கை மற்றும் கால் எழும்புகள் உடைந்துள்ளன. சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தன்னை அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பலமுறை எட்டி உதைத்தார் என ஒரு மாணவர் தெரிவித்தார்.

இதுபோன்ற தன் மாநில மாணவர்கள் மீதே வன்முறையை தூண்டுவதோடு, அதை ஊக்குவிக்கும் விதமாக அரசு செயல்படுவது மிக ஆழமாக சந்தேகங்களை எழுப்புகிறது” என்று தெரிவித்தார்.