புதுடெல்லி: கருத்துக்கணிப்புகள் குறித்து கவலைப்பட வேண்டாமெனவும், மே 23 வரை காத்திருக்கும்படியும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அன்றைய தினம் ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வட்டத்திற்கும் ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளது.

கிட்டத்தட்ட சொல்லிவைத்த மாதிரியே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று கூறிக்கொண்டு, பல முக்கிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட அனைத்திலும், பாரதீய ஜனதா கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் கெளடா கூறியுள்ளதாவது, “வரும் 23ம் தேதி வரை மட்டும் காத்திருங்கள். நாங்கள் அன்றைய தினம் உங்களுக்கு ஆச்சர்யம் அளிப்போம். ஒட்டுமொத்த வாக்கு சதவிகித பிரிவு மற்றும் அதற்கேற்ற இடங்கள் ஆகியவற்றை கணிப்பது அவ்வளவு எளிதல்ல.

மேலும், பயம் காரணமாக, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்று மக்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்” என்றுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், “இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒரு பெரிய சதித்திட்டம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.